Friday 15 June 2012

ஹடயோகா - உடல்நலம் தாண்டிய விஞ்ஞானம்

ஆசனா என்பதற்கு 'நிலை' என்று பொருள். நாம் நிற்பது ஒரு ஆசனா. உட்காருவது ஒரு ஆசனா. இவற்றைப்போல் நூற்றுக்கணக்கான ஆசனாக்கள் இருக்கின்றன. இவற்றில் சிலவற்றை மட்டும் நாம் யோகாசனங்கள் என்கிறோம். ஏனென்றால் இவற்றில் சிலவற்றிற்கு மட்டும் நம்மை யாரந்த நிலை நோக்கி அழைத்துச்செல்லும் வாய்ப்பு அமையப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட சாதனாவை நீங்கள் உங்களுக்குள் சரியாக உள்வாங்கிக் கொண்டு தொடர்ந்து செய்து வரும்போது, அவை உங்களைக் கைவிடாது. வாழ்க்கையின் பல்முனைத் தாக்குதல்களை நீங்கள் எந்தவித சிரமமுமின்றி எதிர்கொள்ள முடியும். ஏனென்றால் நீங்கள் உடலளவில் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், உங்கள் உடலின் இன்னொரு பரிமாணம் உங்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளும். கடின உழைப்பினால் உங்கள் உடலின் அத்தனை தசைகளும் களைப்படைந்துவிட்டாலும், ஓய்வோ, தூக்கமோ இல்லாமல் இருந்தாலும் கூட, உங்கள் உடல் கட்டமைப்பு கொஞ்ச நேரத்திலேயே தன்னை மீட்டெடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் இந்த சாதனாக்களின் மூலமாக உங்கள் சக்திநிலை ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தில் இருக்கிறது. சாதனாவுக்கென்று பல அம்சங்கள் இருந்தாலும், அதில் ஹடயோகா என்பது ஒரு முக்கியமான அம்சமாகும்.
ஹடயோகாவை சரியான ஒரு சூழ்நிலையில், அடக்க உணர்வுடனும் அனைத்தையும் இணைத்துக் கொள்ளும் ஒரு மனோபாவத்துடனும் கற்றுத் தந்தால், அது மிக அற்புதமான ஒரு செயல்பாடாக ஆகிவிடும். இன்றைய தினம் ஹடயோகா ஏன் இவ்வளவு கெட்ட பெயர் பெற்றுள்ளது என்றால், கற்றுத்தருபவர்கள் அதை ஒரு சர்க்கஸ் போல கற்றுத் தரத் துவங்கிவிட்டார்கள். வேறு யாரோ ஒருவரை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் நிரூபிக்க விரும்புகிறார்கள்.
யோகா என்பது உங்கள் உடலை கட்டுமஸ்தாக ஆக்கி, அதை வெளிக்காட்டுவதற்காக செய்யப்படுவதல்ல. உங்களை உடலை, தெய்வீகத்தை உள்வாங்கிக் கொள்ளும் திறன் படைத்த ஓர் அற்புத பாத்திரமாக, அழகான கருவியாக ஆக்குவதற்குத்தான் யோகா. ஹடயோகா என்பது ஓர் அற்புதமான செயல்முறை. ஆனால் இன்று ஏகப்பட்ட சிகிச்சையாளர்களும், உடல்நிலை வல்லுனர்களும் புத்தகங்கள் எழுதிக் குவித்து, ஹடயோகா என்பது ஒருவகையான உடற்பயிற்சி என்று மக்களை நம்ப வைக்கிறார்கள்.
ஆனால் யோகாவைக் கற்பிக்க விரும்புபவர்கள் அதற்கு ஒருவிதமான அர்ப்பணிப்பு உணர்வுடனும் விருப்ப உணர்வுடனும் தங்கள் நேரத்தை செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் உடனடி பலன்களைத் தரும் யோகாவை மட்டும் கற்றுக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், யோகாவையே மாற்றி அமைப்பதற்கும் அவர்கள் மடத்தனமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்த யோக அமைப்பைப் பற்றி நன்கு தெரிந்த மக்கள், இவையெல்லாம் இப்படி, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுத்து வைத்திருக்கிறார்கள். யோகாவில் மேலோட்டமாகத் தெரியும் விஷயங்களை விட இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் புரியாமல் இன்று மேலோட்டமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஹடயோகாவை மாற்ற முயற்சிக்கிறார்கள். இன்று தண்ணீருக்குள் செய்யும் யோகா, வானிலிருந்து குதித்துக் கொண்டே யோகா… என்று இப்படி நிறைய பொறுப்பற்ற செயல்கள் நடந்துவருகின்றன.
மேற்கத்திய நாட்டவர்கள்  செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால் – இது பொதுவாக அனைத்து இடங்களிலும் நடப்பதாக நினைக்கிறேன் – யோகா செய்யும்போது பின்னணி இசையை ஒலிக்க விடுவது. மேலும் அங்கு யோகா ஆசிரியர் பலவிதமான உடலசைவுகளை செய்து கொண்டு அத்துடன் பேசவும் செய்கிறார். ஆசனா செய்யும்போது நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது; நீங்கள் ஒரு குறிப்பிட்ட மன நிலையில் இருக்க வேண்டும். ஆசிரியர் ஒரு ஆசனாவின் குறிப்பிட்ட நிலையில் இருந்து கொண்டு பேசினால், அது நிச்சயமாக தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல்தான்.
உங்கள் உயிர் தனது இயல்பான கட்டுப்பாடுகளைக் கடந்து செல்ல உதவும் வகையில், உங்கள் உள்நிலை சக்திகளை மாற்றியமைக்கும் ஒரு சூட்சுமமான தொழில்நுட்பம்தான் யோகா. ஆனால் இதை ஒரு உயிர்ப்பான முறையில் அடுத்தவருக்கு வழங்க வேண்டும். இதற்கு அந்த ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட அளவு ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியிருக்கும். இன்றைய உலகத்தில் இது கொஞ்சம் கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கிறது. மனிதர்கள் தங்களது உள்நோக்கிய பயணத்தை உடலிலிருந்து துவங்கி பிறகு மெதுவாக அவர்களை வேறுவிதமான சாத்தியங்களை நோக்கி நகர்த்த வேண்டும்.
இன்று கிட்டத்தட்ட இல்லாமலே ஆகிவிட்ட ஹடயோகாவின் சில பரிமாணங்களை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் . வாழ்க்கையை வாழ்வதற்கு அது மிக, மிக சக்தி வாய்ந்த வழி. இது யார் மீதும் சக்தியைப் பிரயோகிப்பதற்காக இல்லாமல், உயிரை உள்வாங்கிக் கொள்வதற்கான சக்தியாக இருக்கும். உயிரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு, உங்களுக்கு சரியான ஒரு கருவி தேவை. அதற்கு உங்களிடம் இருப்பதெல்லாம் உங்கள் உடல் மட்டும்தான். அதை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையின் உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம், அல்லது வெறும் எலும்பு, சதைக் குவியலாகவும் வைத்திருக்கலாம். உடலை மிகப் பெரிய சாத்தியமாகவும் ஆக்கிக் கொள்ளலாம் அல்லது இச்சைகளின் கூடாரமாகவும் வைத்திருக்கலாம். மறுபடியும் ஆரம்பியுங்கள் முதலில் இருந்து !! ம்... சூரியநமஸ்காரம் !!! Start !!

No comments:

Post a Comment