தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை தினம் மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நம் வாழ்க்கையில் பங்கெடுத்த அத்தனை தலைமுறை மக்களுக்கும் நம்முடைய நன்றியை வெளிப்படுத்தும் விசேஷமான நாளாக மஹாளய அமாவாசை விளங்குகிறது.
இந்த பூமியில் சுமார் 2 கோடி வருடங்களாக மனிதர்களும், அவனுடைய மூதாதையர்களும் வசித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது மிக நீண்ட காலம். நமக்கு முன் இங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான தலைமுறையினர் நமக்கு ஏதோ ஒன்றை கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். நாம் பேசும் மொழி, நாம் உட்காரும் விதம், நம் உடைகள், நம் கட்டிடங்கள் என்று இன்று நமக்குத் தெரிந்த அனைத்துமே நமக்கு முன்பிருந்த தலைமுறையினரிடமிருந்து வந்தவைதான்.
இந்த பூமியில் மிருகங்கள் மட்டும் வசித்து வந்தபோது, உயிர் வாழ்தல், உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல், பின்னொரு இறந்து போதல் என்பது மட்டும்தான் வாழ்க்கையாக இருந்தது. பிறகு உயிர்வாழ மட்டும் தெரிந்த இந்த மிருகம் மெதுவாக பரிணாம வளர்ச்சி பெறத் துவங்கியது.
குறுக்குவாக்கில் இருந்து வந்த இது, மெதுவாக எழுந்து நிற்கத் துவங்கியது; மூளை வளரத் தொடங்கியது; இந்த மிருகத்தின் செயல்திறன் திடீரென்று பெருக ஆரம்பித்தது. மனிதனைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், நம்மால் கருவிகளைப் பயன்படுத்த முடியும். கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்ததால், அவற்றை உருவாகும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கினோம்.
ஒரு நாள் ஒரு மனிதக் குரங்கு தன் கைகளினால் சண்டை போடாமல், மற்றொரு விலங்கின் தொடை எலும்பை எடுத்து சண்டை போட்டது. தன்னுடைய சொந்த உடலைத் தவிர, வேறொன்றை எடுத்து தன் வாழ்க்கைக்குப் பயன்படும் கருவியாக மாற்றிக் கொள்ளும் புத்திசாலித்தனம் அதற்குத் துவங்கியது. அதுதான் ஒரு வகையில் இந்த பூமியில் மனித உயிரின் தொடக்கமாக அமைந்தது. இன்று நாம் இருக்கும் நிலைக்கு, அவர்கள் நமக்குக் கொடுத்தவைதான் காரணம்.
இப்போது மனிதர்கள், மிருகங்களை விட இன்னும் நன்றாக இருக்கும் வகையில் தங்களது வாழ்க்கைகளை வடிவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார்கள். உறைவிடங்கள், கட்டிடங்கள், ஆடைகள் வந்துவிட்டன.
இந்த பூமியில் மனிதர்களால் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தேறிவிட்டன. நெருப்பை உண்டாக்குவது போன்ற எளிய விஷயங்களிலிருந்து, சக்கரத்தைக் கண்டுபிடித்ததுவரை எண்ணற்ற பல விஷயங்கள், மூதாதையர்கள் கொடுத்த சொத்துக்களாக தலைமுறை, தலைமுறைகளாக கைமாறி வந்திருக்கின்றன.
இவையெல்லாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதால்தான் இன்று நாம் இப்படி இருக்கிறோம். உதாரணத்திற்கு மனிதர்கள் ஆடைகளையே உடுத்தாமல் இருந்து, நீங்கள்தான் சட்டை என்று ஒன்றை உருவாக்கும் முதல் மனிதராக இருந்தால், அது அத்தனை சுலபமானதாக இருக்காது. எப்படி ஒரு சட்டையைத் தைப்பது என்று கண்டுபிடிப்பதற்கே பல வருடங்கள் ஆகிவிடும்.
இன்று நம்மிடம் இருக்கும் அத்தனை விஷயங்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டோம். ஆனால் நமக்கு முன்பிருந்த தலைமுறையினர் இல்லாமல், முதலில் நம்மால் இங்கே இருந்திருக்கக்கூட முடியாது.
இரண்டாவது, அவர்களுடைய பங்களிப்புகள் இல்லாமல், இன்று நம்மிடையே இருக்கும் பொருட்கள் எதுவும் இங்கு இருந்திருக்காது. எனவே அவர்களை சாதாரணமாக நினைக்காமல், அவர்கள் அனைவரின் மீதும் நாம் கொண்டுள்ள நன்றியை வெளிப்படுத்தும் நாள் இன்று. நடைமுறையில் இது ஒருவர் தனது இறந்து போன பெற்றோர்களுக்குச் செய்யும் சடங்காகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் இது நமக்கு முன்னால் இங்கே வாழ்ந்த அத்தனை மூதாதையருக்கும், அவர்களது அத்தனை தலைமுறையினருக்கும் நம்முடைய நன்றியின் வெளிப்பாடு.
இந்த நேரத்தில்தான், இந்திய துணைக்கண்டத்தில், புதிய பயிர்கள் விளைச்சலின் பலனைத் தரத் துவங்கியிருக்கும். நமது மூதாதையர்கள் மேல் கொண்ட மரியாதையையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, நவராத்திரி, விஜயதசமி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாட்டங்களில் திளைப்பதற்கு முன்னால், அந்த விளைச்சலை அவர்களுக்குப் பிண்டமாகப் படைத்து அர்ப்பணிக்கிறோம்.
No comments:
Post a Comment