மக்கள் செயலிழந்து நிற்கும் போதெல்லாம் ‘நான் மனிதன்தானே’ என்ற பல்லவியைப் பாடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக தோல்வி, பலவீனம் ஆகியவற்றுடன்தான் மனிதனை அடையாளப் படுத்துகிறார்கள்.
மனிதன் என்பவன் பலத்துடனும், திறமையுடனும், எல்லா சாத்தியங்களுடனும் அடையாளம் காணப்பட வேண்டும். நான் மனிதன்தானே என்று மக்கள் புலம்பும்போது, தங்களை எப்போதும் பலவீனங்களோடும் எல்லைகளோடும்தான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
மனிதனாக இருப்பதால் தனக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளுடன், சாத்தியங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளத் தவறுகிறார்கள். ஆனந்தம், பேரானந்தம், களிப்பு போன்றவையெல்லாம் மனிதனுக்கு மட்டுமே சாத்தியங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், மக்கள் இவற்றை மனிதனுடன் அடையாளப்படுத்தாமல் எல்லாவற்றையும் சொர்க்கத்துக்கு ஏற்றுமதி செய்துவிட்டார்கள். சாதாரணமாக இருக்க வேண்டிய அன்பைக்கூட தெய்வீக அன்பு என்று சொல்லிக் கொள்வார்கள்.
மனிதனின் மகத்துவமான குணங்களை எல்லாம் தெய்வீகமாக மாற்றி சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு, மோசமான குணங்களை மட்டுமே மனிதனுக்கு உரியதாக ஐக்கியப்படுத்தப் பார்க்கிறீர்கள்.
நான் மனிதன், எனவே நான் துன்பப்பட முடியும், விரக்தி அடைய முடியும் என்று நினைக்கிறீர்கள். இன்னொரு முறை அப்படிச் செய்யாதீர்கள்.
தற்போது உங்கள் மனம் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லை. எனவேதான் துன்பமும் விரக்தியும் அடைகிறீர்கள். உங்கள் மனம் நீங்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால், சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்தானே? நிச்சயமாக சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்.
சிந்திப்பது என்பது ஆனந்தமான ஒன்று. இது ஒரு சிறந்த கருவி. இந்தக் கருவியை நீங்கள் இன்னமும் நன்கு பயன்படுத்த முடியும். மனிதனுக்கு இப்போதுள்ள சாத்தியங்கள் லட்சக்கணக்கான ஆண்டு பரிணாம வளர்ச்சிக்குப்பிறகு கிடைத்தவை.
எனவே, மனிதத்தன்மையைப் பழிக்காதீர்கள், கவலை, துன்பம் ஆகியவற்றுடன் அடையாளப்படுத்தாதீர்கள்.
நான் மனிதன் என்று நீங்கள் சொல்லும்போது, இனி மிகவும் அழகான தருணங்களையும், அன்பான தருணங்களையும், ஆனந்தமான தருணங்களையும் நீங்கள் நினைக்க வேண்டும். அன்பு, ஆனந்தம் இவை எல்லாம் எனக்கே உரியவை, ஏனெனில் நான் மனிதன் என நீங்கள் நினைக்கப் பழகுங்கள்!
No comments:
Post a Comment